ஈழத்தமிழர் தேசத்தின் மீதான இன அழிப்பையும் அதற்கெதிரான விடுதலைப் போராட்டத்தையும் இளைய தலைமுறைக்கும் உலக மானுடத்துக்கும் எடுத்துரைப்பதற்கான நூலாக்கப் பெருந்திட்டம்
தேவையின் பின்னணி
இளைய தலைமுறைக்கு எடுத்துரைக்கப் பொருத்தமான வரலாற்றியற் பார்வையோடு, தகுந்த ஆய்வுகளை முன்னெடுத்து, வரலாற்றுப் பாடநூல்களை மட்டுமல்ல, தமிழ் மொழியிலும் பிறமொழிகளிலும் ஈழத்தமிழர்களின் காலனித்துவ, பிற்காலனித்துவ வரலாற்று நிகழ்வுகள், சமகாலச் சம்பவங்கள் நூலாக்கம் பெறவேண்டும்.
அது மட்டுமன்றி, எதிர்பார்ப்புடனான எதிர்காலத்துக்குரிய எதிர்வுகூறல்களுக்கு உதவக்கூடிய கோட்பாடுகளும் சிந்தனைகளும் தகவல்களும் பின்முள்ளிவாய்க்காற் காலத்திற்குரிய வகையில் மீள்வாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டு நூலாக்கம் நடைபெற வேண்டும்.
இளைய தலைமுறை மட்டுமல்ல வெளியுலகும் இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையில் நூலாக்கத்தின் போது உருவாகும் வெளிப்படுத்தல்கள் எல்லையற்றுப் பயன்படவேண்டும்.
இதன் அவசியத்தைப் புலம் பெயர் ஈழத்தமிழர் சமுதாயம் தற்போது உணர்ந்திருக்கிறது.
இளைய தலைமுறைக்கும் வெளியுலகுக்கும் மட்டுமல்ல, எமது படைப்பாளிகள் தொடக்கம் அறிவுழைப்பினர் வரை இந்தத் தேவை ஆழமாக உணரப்பட்டிருக்கிறது.
சில பலனுள்ள முயற்சிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் அவை மிகமுக்கியமான பின்முள்ளிவாய்க்காற் காலத்தைத் தவறவிட்டுள்ளன. அதுமட்டுமன்றி, நீண்ட நூல்களாக வெளிவந்திருக்கும் அவை நவீன உத்திகளைப் பயன்படுத்தாமையினால் எடுத்துரைப்புக்குரிய கனதியைத் தவறவிட்டுள்ளன.
ஆகவே, நவீன யுகத்துக்குரிய தரவுவரைகலையோடு, ஆய்வுக்குட்படுத்தப்பட்ட ஒப்பீடுகள், புள்ளிவிபரங்கள் மற்றும் புதிதாய் ஆக்கப்பட்ட வரைபடங்களோடு, எந்தவித ஒளிவு மறைவோ, சுயதணிக்கைகளோ, அச்சம் நாணமோ, காய்தல் உவத்தலோ இன்றி, ஈழத்தமிழரின் விடுதலை வேணவாவின் நியாயப்பாடுகளையும் அவர் தம் போராட்டத்தையும் அதன் தற்போதைய நிலையையும் உலக மாந்தருக்கு எடுத்தியம்ப அடித்தளமிடும் நூலாக்கப் பெருந்திட்டம் ஒன்று ஈழத்தமிழர் தேசத்திற்குத் தேவைப்படுகிறது.
இந்தப் பூனைக்கு மணிகட்டுவது யார் என்ற வினா இனிமேலும் தொக்கு நிக்கும் கேள்வியாகத் தொடரப்போவதில்லை.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தைச் சர்வதேசம் உற்றுநோக்கப் பயன்பட்ட ஆங்கில இணைய ஊடகமான தமிழ்நெற் இதற்கான பெருந்திட்டத்தைத் தயாரித்து முன்னெடுக்க முடிவெடுத்துக் களம் இறங்கியுள்ளது.
ஏற்கனவே, கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக, தமிழ்நெற் ஆசிரியபீடம் இணைந்து இயங்கிவரும் செயற்படுதளமான தமிழ் வாதாடு தளத்தின் (Tamil Advocacy platform / tamiladvocacy.org) ஊடாக தமிழின அழிப்புக்கான சர்வதேச நீதியை நிறுவுவதற்கான தரவலக (database) மற்றும் தரவுத்தொடர்பியற் (data correlation) திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது.
தற்போது இத்திட்டம் துடிமத் தளமாக தொழில்நுட்பரீதியாகத் தயாரிக்கப்படும் (information system) ஆரம்பநிலைக்கு முன்னேறியுள்ளது. இத்திட்டமிடலின்போது இன அழிப்பை நிறுவுதற்கான தரவுகளும் நியாயப்பாடுகளும் எவ்வாறு தொடர்புபடுத்தப்படவேண்டும் என்பது பற்றிய ஒரு தெளிவான பார்வை எம்மிடம் ஏற்பட்டிருக்கிறது.
இந்தப் பார்வையோடும், போராட்டத்தின் சர்வதேச ஊடகமாயிருந்த பின்னணியோடும், இளையோருக்கான பட்டறைகளை நடாத்திவந்த பட்டறிவோடும் நூலாக்கப் பெருந்திட்டம் ஆக்கப்படுவது பொருத்தமானது மட்டுமல்ல, அவசியத் தேவையும் கூட என்பது பலராலும் உணர்ந்து முன்வைக்கப்படுகின்ற கருத்தாக உள்ளது.
ஐரோப்பாவின் பல பாகங்களில் இருந்தும், வட அமெரிக்காவில் இருந்தும், குறிப்பாக இளைய தலைமுறையினர் இந்தத் தேவையை எம்மிடம் வலியுறுத்தியுள்ளனர்.
நவீனமயப்படுத்தப்பட்ட நூலாக்க வேலைத்திட்டம் ஒன்று குறித்த ஈடுபாடு 1990 களின் நடுப்பகுதியில் இருந்தே தமிழ்நெற் ஆசிரியபீடத்துக்கு இருந்துவந்திருக்கிறது. தமிழ்நெற் இணையத்தள ஆரம்பத்திலேயே ‘ஈழத்தமிழர் தேசத்தின் கதை’ என்ற ஒரு வேலைத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. அது அப்போதைய இளந்தலைமுறை எழுத்தாளர் ஒருவரால் தொகுக்கப்பட்டது. எனினும், குறித்த வேலைத் திட்டத்துக்குள் முழுமூச்சுடன் இறங்கித் தொழிற்படுவது தொடர்பான தயக்கம் எமக்கு ஏற்பட்டது. பொருத்தமான வளம் இன்மை மட்டுமல்ல, செய்திநிறுவனம் ஒன்றை உருவாக்குதலில் எமது அனைத்து வளங்களையும் குவியப்படுத்தி ஒன்றுதிரட்டவேண்டியிருந்தது.
தற்போது, பொதுமக்கள் மத்தியிலும் ஊடகத் தேவைக்காகத் தொடர்ந்தும் நிதியுதவி வழங்கும் மனப்பாங்கு, குறிப்பாக 2009 இற்குப் பின்னர், அருகிவருகிறது.
எமது வேலைத்திட்டங்கள் மற்றும் நிதியூட்டம் குறித்த அணுகுமுறைகள் மீதான மீள்பரிசீலனை மற்றும் சுயவிமர்சனம், 2018 தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு, அதன் விளைவாகத் தற்போது நூலாக்க முயற்சிகளில் ஈடுபடும் நிலைக்கு வந்திருக்கிறோம்.
நூலாக்கப் பெருந்திட்டம்
நூலாக்கப் பெருந்திட்டம் ஒன்று வேலைத்திட்டமாக மலரும் காலம் வந்துவிட்ட சூழ்நிலையில், எமது தேசத்தின் பல தளங்களிலுமான அறிவுப் பரப்பினை மீண்டும் அணுகி புள்ளிவிபரங்களையும் தரவு மீள்வாசிப்பையும் ஆய்வு முறைகளூடாக மேற்கொள்ளவேண்டியிருக்கும்.
அதற்கு முன்னதாக, பொருத்தமான வரலாற்றியல் அணுகுமுறை ஒன்று வகுக்கப்பட்டாகவேண்டும். வேலைத்திட்டம் தகுந்த முறையில் ஒருங்கிணைக்கப்படவேண்டும். இறுதியில் அனைத்துத் தரவுகளும் எழுத்துருவாக்கத்துக்கும் வரைகலை அமைப்புக்கும் உள்ளாக்கப்பட்டு, நூலாக்கங்கள் உரிய மொழிநடையில் சென்றடையவேண்டிய வாசிப்பு இலக்குகளுக்கு உரிய முறையில் எடுத்து இயம்பப்படவேண்டும்.
எனவே, இந்த வேலைத்திட்டத்துக்கான நிதியூட்டத் தேவையைப் பொருத்தமாகத் திட்டமிடுவதே முதலில் அவசியமாகிறது. இதற்கான அறிவிப்பையே தற்போது மேற்கொள்கிறோம்.
அறிவு வளங்களை ஒருங்கிணைத்துச் செயற்படும் ஆற்றல் எம்மிடம் இருக்கிறது. ஆனால், இப் பெருந்திட்டத்திற்குத் தேவையான நிதிவளம் எம்மிடம் இல்லை. இதை எந்த ஒரு அமைப்பிலோ, அணிகளிலோ அல்லது ஒரு சில நலன்விரும்பிகளின் நிதி உதவியில் மாத்திரமோ தங்கியிருந்தவாறு முன்னெடுப்பது இயலாது. சுயாதீனமான முறையில், ஆனால் அனைவரின் பங்கேற்போடு, இப் பெருந்திட்டம் செயற்படுத்தப்படவேண்டும் என்பதே எமது விருப்பு.
அதேவேளை, உருவாகும் நூலை, அல்லது நூல்களை, மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் பலதரப்பட்ட அமைப்புகளின், கல்விநிறுவனங்களின் பங்கேற்பு மிகவும் அவசியமாகின்றது.
சமகால வரலாற்றையும் அது தொடர்பான பிம்பங்களையும் முன்வைப்பதில் சட்டரீதியான சிக்கல்கள் ஏற்படலாம் என்ற கருத்தைச் சில கல்வி நிறுவனங்கள் எம்மோடு உரையாடுகையில் தெரிவித்துள்ளன.
ஆனால், பொருத்தமான அணுகுமுறைகள் ஊடாக சமகால வரலாற்றை ஒளிவு மறைவின்றி, தயக்கமின்றி முன்வைக்கலாம் என்பதும், அவ்வாறான சட்டச்சிக்கல்களை எந்தத் தரப்பு ஏற்படுத்தினாலும் அவற்றை எதிர்கொண்டு முன்னேறுவதே ஒரு தேசத்தின் போராட்டம் என்பதையும் அவர்களுக்கு எடுத்து விளக்கியுள்ளோம். அதற்கான வழிமுறைகள் சிலவற்றை அவர்களுக்குத் தெரியப்படுத்தியும் உள்ளோம். இந்த வகையில் அனைத்து கல்விநிறுவனங்களுக்கும் பட்டறைகளை நடாத்தவும் முன்வந்துள்ளோம்.
அதுமட்டுமன்றி, எந்தவிதமான சட்டரீதியான சிக்கல்கள் முன்வைக்கப்பட்டாலும் அவற்றை எதிர்கொள்வதற்குத் தயாரான அறத்துடன் எமது நூலாக்கப் பயணம் முன்னெடுக்கப்படும். தமிழ்நெற் போராட்ட காலத்திலும் அதற்குப் பின்னரும் அந்த அறத்துடனேயே இயங்கிவருகிறது.
சரணாகதி அரசியலுக்கோ, "அபிவிருத்தி" எனப்படும் அரசியலுக்கோ, எமது தேசிய நலனுக்குக் குந்தகமான வகையில் அமையும் இணக்க அரசியலுக்கோ, சமரசங்களுக்கோ வேறு நெருக்கடிகளுக்கோ ஆளாகாத வகையில் நூலாக்கம் நடைபெறுவதும் வெளிப்படைத்தன்மையுடனான நிதியூட்டம் அமைவதும் அவசியமாகிறது.
இந்த அடிப்படையில் உள்ளடக்கத்தை முழுமையான சுயாதீனத்தன்மையுடன் தயாரிப்பது என்றும் குறித்த அமைப்புகளோடு குறைந்தபட்சம் விநியோகத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முடியுமானால் செய்துகொள்வது பொருத்தமாயிருக்கும் என்றும் தீர்மானித்திருக்கிறோம்.
இந்தப் புரிந்துணர்வு, நூலாக்க உள்ளடக்கத்தின் தன்மையை எந்தவகையிலும் பாதிக்காத வகையிலேயே மேற்கொள்ளப்படவேண்டும் என்பதே எமது அடிப்படையான கரிசனையாக இருக்கிறது. இதற்கான சில ஆரம்பக் கலந்துரையாடல்களை கடந்த சில நாட்களாக ஒரு சில கல்விநிறுவனங்களுடன் மேற்கொண்டிருந்தோம். நல்லெண்ண ஆதரவுச் சமிக்ஞைகள் சில எமக்குக் கிடைத்துள்ளன.
இந்தப் பெருந்திட்டத்திற்கான நிதிமூலம் சுயாதீனமாகவே திரட்டப்படவேண்டும். உரிய நிறுவனப் பதிவுகளுடனும் சட்டரீதியாகக் கணக்குத் தணிக்கையாளரினால் கண்காணிக்கப்படும் வகையிலான அறக்கட்டளைகள் ஊடாகவுமே நிதித் திரட்டல் மேற்கொள்ளப்படவேண்டும். இதற்கான ஒழுங்குகளைத் தற்போது பூர்த்தியாக்கியுள்ளோம். தமிழ்நெற் அறக்கட்டளை, மாற்றுச் செய்திநிறுவன வலைப்பின்னல் அறக்கட்டளை என்பவற்றின் சட்டரீதியான பங்காற்றல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கணிசமான பணிகள் தொண்டுமுறையில் செய்யப்படலாம். எனினும், அவசியமான சில அடிப்படை வேலைகளை நவீன உலகத்தளத்தில் முன்னணியில் இருக்கும் துறைசார்ந்த புலமைத்துவம் கொண்டோரை அணுகி, தொழில் ரீதியாக வரைகலை நுட்பங்கள் மற்றும் சர்வதேச ஒப்பீட்டுத் தரவுகளையும் அவதானிப்புகளையும் கருத்துகளையும் ஆதாரபூர்வமாகப் பெற்றுக்கொள்ளவும், இல்லாதவற்றை உருவாக்கவும் நிதித் தேவை அடிப்படையாகிறது. இந்தப் பெரும்பணிக்கே மக்களிடம் சேர்க்கப்படும் நிதி பயன்படுத்தப்படவேண்டும்.
முதற்கட்டமாக முழுமையான உத்தேச நிதிச்செலவுத் திட்டம் ஒன்று தயாரிக்கப்படுவது அவசியம். அந்த உத்தேச நிதிச்செலவுத் திட்டம் முழுமையாக அமைக்கப்பட முன்னதாகவே, குறைந்தபட்சச் செலவு எவ்வாறு இருக்கும் என்பதற்கான கணிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் புலம்பெயர் ஈழத்தமிழர்களிடம் நிதிப்பங்களிப்புக் கோரப்படுகிறது.
முழுமையான நிதிச்செலவுத் திட்டம் எதிர்வரும் மாதங்களில் அதற்குரிய திறமையாளர்களின் பங்கேற்புடன் முன்வைக்கப்படும்.
இனி, தொழில்நுட்பத் தகவலோடு மேற்கொள்ளப்பட்டுள்ள குறைந்தபட்சச் செலவு குறித்த தரவுகளை இங்கு தருகிறோம். இது பெருந்திட்டத்தின் கனதியை வெளிப்படுத்துவதாக அமைகிறது என்பது மட்டுமல்ல, இந்த நிதிச் சேகரிப்பு பூர்த்தியாகும் போது வேலைத் திட்டம் விரைவாக நடாத்தப்படுவதும் உறுதியாக்கப்படும்.
உத்தேசமான குறைந்தபட்ச நிதிச் செலவு
குறைந்தது நூறு தரவு-வரைகலைப்படங்களைப் புனைவதற்கு ஒன்றுக்கு இருநூறு டொலர்கள் என்ற அடிப்படையில் இருபதாயிரம் டொலர்கள் வெளி நிபுணர்களுக்கான செலவாகும்.
இதைப்போல வரைபடங்களுக்கு ஐயாயிரம் டொலர்கள் தேவைப்படும். புள்ளிவிபர ஒப்பீட்டு ஆய்வுகளுக்கும் குறைந்தது ஐயாயிரம் டொலர்கள் தேவையாகும்.
ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நூல்களின் வடிவமைப்புப் பணிக்குக் குறைந்தது மூவாயிரம் டொலர்கள் தேவைப்படும்.
மொழிபெயர்ப்பு வேலைக்கும் இதைப் போல மூவாயிரம் டொலர்கள் தேவைப்படும்.
அதுமட்டுமல்ல, இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையான வரலாற்றியல் அணுகுமுறையை வகுப்பதற்கு மூவாயிரம் டொலர்கள் வரை செலவிடவேண்டியிருக்கும்.
எனவே நாற்பதாயிரம் டொலர்கள் இந்தப் பெருந்திட்டத்துக்குத் தவிர்க்கமுடியாத அடிப்படை நிதித் தேவையாகின்றது.
இதைத் திரட்டும் பணியை உடனடியாக மக்கள் திரட்சி நிதியூட்ட முறை ஒன்றின் ஊடாக ஆரம்பித்திருக்கிறோம்.
பெருந்தொகையிலான நூலாக்கம் என்பது இரண்டாம் பட்சமானது. அதற்குரிய வரவு செலவுத் திட்டம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டபின்னர் இறுதிக் கட்டத்தில் மேற்கொள்ளப்படும். இதற்குப் பொதுமக்களின் நிதிப்பங்களிப்புத் தேவை இருக்காது என்று நாம் கருதுகிறோம்.
ஆகவே, ஆய்வுக்குரிய அடிப்படை வேலைகளுக்குரிய நாற்பதாயிரம் அமெரிக்க டொலர்களைப் பரோபகார எண்ணமுள்ளவர்களிடம் உடனடியாகச் சேகரிக்க விழைகிறோம்.
நூலாக்கப் பெருந்திட்டத்தின் உள்ளடக்கம்
ஆதி வரலாறு குறித்த பல ஆய்வுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் சுருக்கமான அடிப்படைகளைச் சரியான முறையில் ஆரம்பத்தில் தொகுத்தளித்துவிட்டு, பதினாறாம் நூற்றாண்டில் இருந்து, ஈழத் தமிழர் தேசத்தின் அரசாட்சியை, அதாவது இலங்கைத் தீவின் வடக்குக் கிழக்கிற்கான தமிழ் இறைமையைப் பறித்துக்கொண்ட ஐரோப்பியக் காலனித்துவம் இறுதியில் முழுத்தீவையும் ஈழத் தமிழர் விருப்புக்கு மாறாக ஒற்றையாட்சி ஆக்கியமை எவ்வாறு நடந்தேறியது என்பதையும் அது ஏற்படுத்திய ஆழமான தாக்கங்களையும் இளைய தலைமுறைக்கு விளங்கச்செய்வது ஈழத்தமிழ் வரலாற்று மாணாக்கரின் புரிதலுக்கு அவசியமாகிறது.
ஐரோப்பியக் காலனித்துவத்தைத் தொடர்ந்து, தீவுக்குள் ஈழத்தமிழர் மீது புதியதொரு காலனித்துவமாக சிங்கள தேரவாத பௌத்த மேலாதிக்கம் தலையோங்கியது. அது காலத்தால் நீண்டு செல்லும் நெடியதோர் இன அழிப்பாக முனைப்புப் பெறும்வகையில் அமைந்த அடக்குமுறைகளதும் தாக்குதல்களதும் தொடர்கதையை அறிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.
அவற்றை எதிர்கொண்ட ஈழத்தமிழர் தேசம் அமைதிவழியிலும் ஆயுதப்போராட்ட முறையிலும் அளப்பரிய அர்ப்பணிப்புகளுடன் எவ்வாறு போராடியது என்பதைத் தெளிவாக உணரும் வகையில் எடுத்துரைப்பது அவசியமாகிறது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தினதும் அது உருவாக்கிய நடைமுறை அரசினதும் மாண்பும் விழுமியங்களும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் தர்க்கீகமும் முன்வைக்கப்படுவது மிகவும் முக்கியமாகிறது.
அதுமட்டுமல்ல, ஈழத்தமிழர் தேசத்தின் போராட்டத்தில் அவ்வப்போது தலையிட்ட பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகள் தமது புவிசார் நலன்கள் சார்ந்து மேற்கொண்ட குந்தகமான நடவடிக்கைகளையும், அவற்றுக்குச் சளைக்காது ஈழத்தமிழர் இறைமையைச் சரணாகதியாக்காது முள்ளிவாய்க்கால் வரை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் அறமும் மறமும் ஆழமான புரிதலுக்குரியவை.
அதேபோல, காலனித்துவ, பிராந்திய, சர்வதேசப் பொறுப்புக்கூறல் என்றால் என்ன என்பதும் தெளிவாக முன்வைக்கப்படவேண்டும்.
தொடர்ந்து, பின்முள்ளிவாய்க்காற் காலத்தில் ஈழத்தமிழர் தேசம் எதிர்பார்க்கும் சர்வதேச நீதியை மட்டுமல்ல புதிய வழிகளில் தொடரப்படவேண்டிய தேசக்கட்டலின் கனதியையும் எதிர்காலத் தேசச் சிற்பிகள் தம் மனதில் இருத்தி எண்ணத் தலைப்படல் வேண்டும்.
இவ்வாறு எமது வரலாற்றையும், சமகாலத்தையும் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளையும் எமது இளைய தலைமுறை மட்டுமல்ல, உலக சமுதாயமே அறிந்துகொள்ளும் வகையில் எமது வரலாற்றியல் நவீன முறையில் கட்டமைக்கப்படவேண்டும்.
நிதிக்கு அப்பாற்பட்ட பங்கேற்புகளை உறுதிசெய்வதற்கான வேலைத்திட்டமும் வகுக்கப்பட்டுவருகிறது. ஆர்வமுள்ளோர் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரியோடு தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
இப் பெருந்திட்டம் வெற்றியளித்து, இளைய தலைமுறைக்கான பாடநூல் மட்டுமல்ல, ஈழத்தமிழர் மீதான இன அழிப்புக் குறித்த சர்வதேச நீதி, மற்றும் தேசியக் கேள்விக்குரிய அரசியல் நீதிக்குமான தகவற் கட்டமைப்புக்குரிய அடிப்படைகளைச் செதுக்கும் இந்த அரும்பணிக்கு அவசியமான நிதியுதவியைப் பரந்துபட்ட புலம் பெயர் மக்கள் தளத்தில் இருந்து விரைவில் எதிர்பார்க்கிறோம்.
நிதிப்பங்களிப்பை மேற்கொள்ள tamilnet.org என்ற இணையத்தளத்தில் அனைத்துவிபரங்களும் தரப்பட்டுள்ளன.
இந்த அறிவித்தலை தமிழ்நெற் ஆசிரியபீடமும் தமிழ் வாதாடு தளமும் இணைந்து 22 ஒக்ரோபர் 2021 அன்று வெளியிடுகின்றன.